ksmuthukrishnan எழுதியவை | 17/04/2012

கணினியும் நீங்களும் – 22

நா.பார்த்தசாரதி, கோலகங்சார்

 கே: நாம் விரும்பாமலே சில மின்னஞ்சல்கள் நமக்கு வருகின்றன. அந்த மின்னஞ்சல்களை மற்றவர்களுக்கு Forward செய்யச் சொல்கின்றனர். இந்த மின்னஞ்சல்களை அனுப்பவில்லை என்றால் குடும்பத்தில் கெடுதல் வரும். அப்பா அம்மாவுக்கு சண்டை வரும். கடன் தொல்லை வரும் என்று எச்சரிக்கை செய்கின்றனர். என்ன செய்வது? எப்படி தவிர்ப்பது? பயமாக இருக்கிறது.

ப: சென்ற வாரம் எனக்கும் இந்த மாதிரி ஓர் அஞ்சல் வந்தது. அந்த அஞ்சலைப் படியுங்கள். ‘இது உண்மையான கதை. இந்தக் கடிதத்தைப் பலருக்கு அனுப்பியதால், சிலிம் ரிவர் மனோகரன் என்பவருக்கு பத்து இலட்சம் வெள்ளி லாட்டரியில் கிடைத்தது. பீடோர் காளியண்ணன் அனுப்பத் தவறினார். அதனால் அவருடைய மீன் குளத்தில் உள்ள மீன்கள் எல்லாம் செத்து விட்டன. பல இலட்சம் நஷ்டம். இந்தக் கடிதத்தை ஐம்பது பேருக்கு அனுப்புங்கள். 48 மணி நேரத்தில் நல்ல செய்தி வரும். யாராவது பணம் அனுப்புவார்கள். இல்லை என்றால் கெட்ட செய்தி வரும்.’

பாருங்கள். இப்படி எல்லாம் மின்னஞ்சல்கள் வருகின்றன. என்ன செய்வது.  பத்து இலட்சம் கிடைத்த அந்த மனோகரன், சிலில் ரிவரில் எந்தக் கம்பத்தில் எந்தத் தாமானில் இருக்கிறார் என்று சொல்லி இருந்தால் பரவாயில்லை. அவரிடமாவது போய் அவசரத்திற்கு அஞ்சோ பத்தோ கேட்கலாம். இல்லையா. அதை விட்டு விட்டு பத்து பேருக்கு அனுப்பினால் பாராக் ஒபாமாவிடமிருந்து பாராட்டுக் கடிதம் வரும். ஐம்பது பேருக்கு அனுப்பினால் ஐஸ்வர்யாவிடமிருந்து ஐ லவ் யூ கடிதம் வரும் என்று சொல்லி ஆளைக் கவிழ்க்கப் பார்க்கிறார்கள்.

ஏன்யா, இருக்கிற ஒன்றை வைத்துக் கொண்டு குப்பைக் கொட்டுவதற்கே தள்ளாடிக் கொண்டிருக்கிறார்கள். இதில் ஐஸ்வர்யாவின் ஐஸ் கடிதம் ரொம்ப முக்கியமா. போதும்டா சாமி! இவை எல்லாம் வேலை வெட்டி இல்லாதவர்கள், மனநோயினால் பாதிக்கப் பட்டவர்கள், žரியல்களைப் பார்த்து žரியஸாகிப் போனவர்கள் செய்யும் சின்னச் சின்ன சில்மிஷங்கள். மின்னஞ்சல் முகவரிகளைத் தேடி பணத்தை அனுப்பி வைக்க உலகத்தில் யாருமே இருக்க மாட்டார்கள். கவலையை விடுங்கள்.

ஆக, இந்த மாதிரியான இமெயில்கள் இனிமேல் வந்தால் நீங்கள் செய்ய வேண்டிய ஒரு நல்ல காரியம் என்ன தெரியுமா. தூக்கி குப்பைத் தொட்டியில் போடுங்கள். சரியா. விஷமத்தனம் இல்லாத மின்னஞ்சல்கள் வந்தால் என்ன செய்வது. http://www.snopes.com எனும் இணையத் தளத்திற்குச் சென்று கேட்டால் உண்மை தெரிந்துவிடும்.

மனோ ரஞ்சன் <prabu5509@yahoo.com>

 கே: ஐயா, ஒவ்வோரு வாரமும் உங்களுடைய கணினி கேள்வி பதில்களைப் படிக்கக் காத்திருப்பேன். மிகவும் நன்றாக இருக்கிறது. என்னுடைய கேள்வி இதுதான். MP4 இசைக் கோப்புகளை MP3 வடிவத்திற்கு மாற்ற முடியுமா. ஒரு நல்ல மென்பொருள் இலவசமாகக் கிடைக்குமா? உதவி செய்யுங்கள் சார்.

ப: MP என்பது பொதுவாக பயன்படுத்தப் படும் ஒலி அல்லது ஒளி முறைமை. MP3 ஒலி முறைமை வந்த பிறகு கணினி உலகில் ஒரு பெரிய புரட்சியே ஏற்பட்டது. சாதாரணமாக ஒரு பாடலை MP முறைமையில் உருவாக்கினால் 40MB வரும். MB என்பது Mega Bytes என்பதைக் குறிக்கும் கொள் அளவு. MP3 முறைமையில் அதே பாடலை 4MB க்குள் கொண்டு வந்துவிடலாம். கொள் அளவு அதாவது space  சிக்கனமாகிறது.

இந்த MP3 முறைமைக்கு முழு வடிவம் கொடுத்தவர்கள் இந்தியக் கணினி வல்லுநர்கள் என்று பெருமையாகச் சொல்லலாம். கணினி உலகம் என்று சொன்னாலே அங்கே இந்தியர்கள்தான் ‘பளிச்’ என்று தெரிகிறார்கள். MP3 முறைமை மிகவும் எளிமையானது. இலகுவானது. இப்போதைக்கு இந்த முறைமையில் மிகவும் பிரசித்தி பெற்று விளங்கும் பாடல் அமரர் மைக்கல் ஜெக்சனின் ‘பீட் இட்’.

சரி. உங்களுக்கு இந்தச் செயலி எனும் Program இலவசமாக, அதாவது கள்ளத் தனமாகக் கிடைக்கும் இடம் தெரிந்தாக வேண்டும். அப்படித்தானே! ஏன் தம்பி மனோ, நான் நன்றாக இருப்பது உங்களுக்குப் பிடிக்கலையா. வாசகர்களுக்காக உதவி செய் யலாம். அதற்காக, அமலாக்க அதிகாரிகள் எங்களை வாரிக் கொண்டு போகும் அளவுக்கு எங்களுடைய நிலைமை மோசமாகி விடக் கூடாது பாருங்கள். அதனால் என்ன சொல்கிறேன் என்றால், ஓர் ஐம்பது ரிங்கிட் கொடுத்து அசல் மென்பொருளை வாங்கிக் கொள்ளுங்கள். பிரச்னை வராது. சரியா.  நீங்கள் கோலாலம்பூரில் இருப்பதால் புக்கிட் பிந்தாங் Law Yat Plaza, Imbi Plaza வில் தேடினால் கண்டிப்பாகக் கிடைக்கும்.

 

விக்னேஸ், ஈப்போ – viji nesh <sweetnesh.66@gmail.com>

 கே: கணினியைச் சில நிமிடங்கள் பயன்படுத்தாமல் இருந்தால் Mouse கொஞ்ச நேரத்தில் தூங்கிவிடுகிறது?

ப: என்ன செய்வது. கஷ்டப்பட்டு வேலை செய்தால் கண்டிப்பாக யாருக்கும் தூக்கம் வரும். இல்லையா. ஆனால், இங்கே வேறு மாதிரியான தூக்கம். நீங்கள் Wireless Mouse எனும் கம்பியில்லாச் சுழலியைப் பயன்படுத்துகிறீர்கள் என்று நினைக்கிறேன். சில கட்டத்தில் சுழலியைத் தட்டி எழுப்ப வேண்டியிருக்கும். அப்படித்தானே. இருந்தாலும் பரவாயில்லை. கும்பகர்ணன் கணக்கில் தூக்கம் இல்லையே.

கம்பியில்லாச் சுழலியைத் தூங்கச் செய்திடும் செயல்பாடு கணினிக்குள் இருக்கிறது. கணினியில் நாம் எந்த வேலையையும் எட்டு நிமிடங்களுக்கு மேல் செய்யாமல் இருந்தால், கம்பியில்லாச் சுழலி கொட்டாவி விட்டு தூங்கிவிடும். இதற்கு காரணம், சுழலியின் உள்ளே இருக்கும் மின்கலச் சக்தியைக் கணினி மிச்சப் படுத்தும் தன்மை. அதன் வேலையை அது செய்கிறது. இரண்டு மூன்று நிமிடங்களுக்கு ஒரு முறை சுழலியை லேசாக நகர்த்துங்கள். இல்லை என்றால் Control Panel > Mouse > Device Settings போய் சரி செய்து கொள்ளுங்கள்.

 

இளமதி மரியா – elamathimaria@yahoo.com

 கே: Windows Vistaவின் விலை உலகம் பூராவும் குறைந்து விட்டதாகச் சொல் கிறார்களே உண்மையா?

ப: உண்மை. விண்டோஸ் விஸ்தாவில் பல மாதிரியான வெளியீடுகள் உள்ளன. அவற்றில் Vista Home Basic, Vista Home Premium, Vista Ultimate ஆகிய இந்த மூன்றில் ஏதாவது ஒன்றை வாங்கினால் உங்களுக்கு 40% தள்ளுபடி தரப் படுகிறது. மலேசியாவில் கணினியின் பயன்பாடு அதிகரித்து வருவதால் இந்த விலை குறைப்பு. மேலும் பலரை விண்டோஸ் முறைமைக்கு மாற்றவும், Piracy எனும் கள்ளத்தனத்தைக் குறைக்கவும் இந்த ஏற்பாடு.

 

கமலேஸ்வரி, ஈப்போ – k_wary@hotmail.com

 கே: Fire Fox எனும் புதிய வகையான உலவி வந்திருக்கிறதே. நன்றாகச் செயல் படுகிறதா. பிரச்னை இல்லையே?

ப: நல்ல கேள்வி. Fire Fox பற்றி யாராவது கேட்பார்களா என்று எதிர்பார்த்தேன். நீங்கள் கேட்டு விட்டீர்கள். Fire Fox என்பது ஓர் உலவி. அதாவது Internet Explorer போல ஓர் உலவி. ‘இண்டர்நெட் எக்ஸ்புளோரர்’ ஐ மைக்ராசாப்ட் நிறுவனம் விற்று வருகிறது.

Fire Fox ஐ Mozilla நிறுவனம் இலவசமாகக் கொடுக்கிறது. இந்த நரிப் பிழம்பின் சாதனைகளை இங்கே சொல்ல வேண்டும். இணையத்தில் உலவ வேண்டும் என்றால் அதற்கு ஒரு நிரலி வேண்டும். அந்த நிரலிக்குப் பெயர்தான் உலவி. அந்த நிரலி கணினியில் இல்லை என்றால் நீங்கள் இணையத்திற்குள் நுழைய முடியாது.

விண்டோஸ் பயன்படுத்துபவர்களுக்குப் பிரச்னை இல்லை. அதைப் பயன்படுத்தாதவர்கள் என்ன செய்வார்கள். சிலர் விண்டோஸ”க்குப் பதிலாக Linux, Mac போன்றவற்றைப் பயன்படுத்துகிறார்கள். தெரியும் தானே. இவர்களுக்காகச் செய்யப் பட்டதுதான் இந்த நரிப் பிழம்பு எனும் உலவி. இந்த உலவியைத் தயாரிக்க ஆரம்பித்ததும் உலகத்தில் உள்ள எல்லா தலை சிறந்த கணினி வல்லுநர்களும் உதவிக்கு வந்து விட்டார்கள்.

மலேசியாவில் ஒரு பத்து பதினைந்து பேர். உலக மக்கள் இலவசமாக அனுபவிக்கட்டுமே என்கிற ஒரு மனித நேயம்தான். மைக்ராசாப்ட் நிறுவனத்தின் இண்டர்நெட் எக்ஸ்புளோரர் உலவியின் நம்பகத்தன்மை குறையக் குறைய, இணையப் பயன்பாட்டிற்கு உலக மக்கள் வேறோர் உலவியை விரும்பினார்கள். ஆக, வேகமாகவும் பாதுகாப்பாகவும் அதே சமயத்தில் பற்பல புதிய நவீன வசதிகளைத் தரும் நரிப் பிழம்பு எனும் உலவி வடிவமைக்கப்பட்டது.

ஆயிரக்கணக்கான பொறியியல் வல்லுநர்கள் மூன்று ஆண்டுகள் ஆராய்ச்சி செய் தார்கள். உலகம் முழுமையும் இந்த வல்லுநர்கள் அல்லும் பகலும் உழைத்தார்கள். சம்பளம், ஊதியம், விளம்பரம், புகழ்ச்சி  என்று எதுவுமே பார்க்கவில்லை. ஒரு சின்ன பிரச்னை என்றால் ஜப்பானில் இருந்து ஒருவர் ஒன்று சொல்வார். இன்னொருவர் இந்தியாவில் இருந்து ஒரு தீர்வைச் சொல்வார். இன்னொருவர் பிரான்சில் இருந்து  சொல்வார். மலேசியாவில் இருந்து நம்முடைய கருத்துகளைச் சொல்லுவோம்.

இப்படியே 22 ஆயிரம் bugs எனும் தடைகளை நிவர்த்தி செய்தார்கள். கடைசியில் கடந்த ஜூன் மாதம் 17 ஆம் தேதி வெற்றிகரமாக வெளியிடப்பட்டது. இதற்கு பல சிறப்பு அம்சங்கள் உள்ளன.

கூடுதல் பாதுகாப்பு, அதிவேக இயக்கம், தோற்றப் பொலிவு, user friendly எனும் பயன்படுத்துவோர் இலகுத் தன்மை என்று அடுக்கிக் கொண்டே போகலாம். இது வெளியான நாள் அன்று கணினி உலகில் ஒரு சாதனை படைத்து கின்னஸ் சாதனைப் புத்தகத்திலும் இடம் பெற்றது.

ஒரே நாளில் 83 இலட்சம் பேர் பதிவிறக்கம் செய்தார்கள். எந்த நாடுகளிலிருந்து எவ்வளவு பேர் என்பதை http://www.spreadfirefox.com/enUS/worldrecord/  எனும் இணையத் தளத்திற்குப் போனால் தெரியும். உலகின் 46 மொழிகளில் கிடைக்கிறது. அந்தந்த மொழிகளில் செயல்படுகிறது.

தமிழில் செயல்பட முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். இந்த உலவி உண்மையிலேயே ஓர் அற்புதமானது. அத்தனை அதிசயமான சிறப்புகள். http://www.getfirefox.com எனும் இடத்தில் கிடைக்கிறது. ஒரு முறை பயன்படுத்திய பிறகு, அப்புறம் நீங்கள் அதிலிருந்து வெளியே வரவே மாட்டீர்கள். உலக மக்களுக்கு கிடைத்த ஓர் இணையச் சுரபி.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: