ksmuthukrishnan எழுதியவை | 08/09/2009

கணினியும் நீங்களும் – 2

கணினி வாங்க காசு இல்லை என்று மட்டும் தயவு செய்து சொல்லாதீர்கள். அதைப் போல ஓர் அபத்தம் வேறு எதுவுமே இருக்க முடியாது. ஒவ்வொரு வீட்டிலும்      ஒவ்வொரு கணினி இருக்க வேண்டும்.

அரசாங்கத்தின் இலட்சியமும் அதுதான். கணினி ஓர் அவசியமான அத்தியாவசியமான பொருள். ஆடம்பரப் பொருள் அல்ல.

வாஸ்து சாஸ்திரம் பார்க்கிறார்கள். இருக்கிற வீட்டை உடைக்கிறார்கள். ஆயிரக் கணக்கில் செலவு செய்கிறார்கள். நாம் குறை சொல்லவில்லை. அது அவர்களுடைய இஷ்டம். காசு இருக்கிறது செய்கிறார்கள்.

அது அவர்களுடைய உரிமை. ஆனால், ஒர் ஆயிரம் வெள்ளி போட்டு பிள்ளைகளுக்கு ஒரு கணினி வாங்க காசு இல்லை என்பார்கள். இந்த வேதனையைச் சொல்லி எங்கே முட்டிக் கொள்வது.

வீட்டை அலங்காரம் செய்வதற்காக அல்ல கணினி. புனித இடமாக மாற்றுவதற்கு. மற்றவர்கள் பார்த்து மெச்ச வேண்டும் என்பதற்காக சிலர் தேவைப்படாத பொருட்களை எல்லாம் வாங்கிப் போடுவார்கள்.

வீட்டை ஒரு லிட்டல் இந்தியாவாக மாற்றி வைத்திருப்பார்கள். ஆனால், பிள்ளைகள் படிக்கக் கொள்ள ஒரு கணினி வாங்கிப் போட மாட்டார்கள். மனசு வராது.

சில பெற்றோர்கள் விலை உயர்ந்த கணினியை வாங்கி  வீட்டில் வலை போட்டு மூடி கொசு கடிக்காமல் பத்திரமாக வைத்திருப்பார்கள். இவர்களும் தொட மாட்டார்கள். பிள்ளைகளையும் தொடவிட மாட்டார்கள். பின் எதற்கு அந்தக் கணினி. அதற்கும் காரணம் இருக்கிறது.

ஏன் தெரியுமா. வீட்டிற்கு வரும் விருந்தாளிகள் தங்களை உயர்வாக நினைக்க வேண்டும் என்பதற்காக. தங்கள் வீட்டிலும் கணினி இருக்கிறது என்று மற்றவர்கள் பார்த்துப் புகழ வேண்டும் என்பதற்காக. கணினியைக் கொசு கடித்து நோய் நொடி வராமல் பாதுகாப்பது என்ன பெரிய கம்ப சாஸ்திரம்‘!

கணினிகளின் சொர்க்கம் என்று சொல்லப்படும் கோலாலம்பூர் – புக்கிட் பிந்தாங் இம்பி பிலாசாவிற்கும் Low Yatக்கும் நான் அடிக்கடி போவேன். அங்கு போய்ப் பார்க்கும் போது கணினிகளின் விலை மிக மிகக் குறைந்து இருப்பதைப் பார்த்து ஆச்சரியப்பட்டுப் போவேன்.

அப்படி இப்படி என்று பார்த்தாலும் ஒரு கணினி RM600க்கும் கிடைக்கிறது. உண்மை. போய்ப் பாருங்கள் தெரியும். முதலில் ஒரு கணினியை வாங்கிப் போடுங்கள். அப்புறம் பேசலாம்.

உங்கள் வீட்டில் கணினி இருக்கிறதா. பயன்படுத்த தெரியவில்லையா. பயமாக இருக்கிறதா. மனம் குறு குறுவென்று இருக்கிறதா. ஆனால், கற்றுக் கொள்ள ஆசை.

அப்படி என்றால் வீட்டில் கணினியைப் பயன்படுத்துபவர்கள் இருப்பார்கள் இல்லையா. வெட்கப் படாமல் அவர்களிடம் போய்க் கேளுங்கள்.

இந்த ‘இகோ’ பிரச்னையை விட்டுத் தள்ளுங்கள். கண் தெரியவில்லை கை நடுங்குகிறது போன்ற சாக்கு போக்குகளை எல்லாம் மூட்டை கட்டி ஒரு மூலையில் போடுங்கள்.

ஆரம்பத்தில் சின்னச் சின்னத் தவறுகள் வரலாம். அது சகஜம். உங்கள் பிள்ளைகளாக இருந்தாலும் படித்துக் கொடுப்பவரிடம் அனுசரித்துப் போங்கள். ஒரு வாரத்தில் கணினியின் அடிப்படை இயக்கங்களைத் தெரிந்து கொள்ளலாம். அப்புறம் நீங்கள்தான் மாஸ்டர். நெஞ்சை நிமிர்த்தி நடக்கலாம்.

வன்தட்டு – Hard Disc

சரி! கணினி சமசாரத்திற்கு வருவோம். அடுத்து Hard Disc என்று சொல்லப்படும் வன்தட்டு. இது கணினியின் எல்லா தகவல்களையும் சேமித்து வைக்கும் வங்கி. ஒரு  கொள்ளடக்கம். இந்த வன்தட்டின் உள்ளே பல அடுக்குகள் இருக்கும். இந்த அடுக்குகளை Platter என்று சொல்வார்கள்.

இவை சுழல்வதற்கு 12 வால்ட் மின்சாரம் தேவை. ஒரே ஒரு நிமிட நேரத்தில் பல ஆயிரம் முறைகள் சுழலும். அவ்வளவு வேகம். 90 பாகை செல்சியஸ் வெப்பத்தை தாங்கக்கூடிய வன்தட்டுகள் சந்தைக்கு வந்து விட்டன.

அதில் இன்னும் ஒரு 10 பாகை கூடினால் தண்ணிநீர் கொதிக்கும். அவ்வளவு  வெப்பம்! அதையும் தாங்கும் வன்தட்டுகள் வந்துவிட்டன என்றால் பார்த்துக் கொள் ளுங்களேன்.

வன்தட்டுகள் எல்லா தகவல்களையும் 0,1 எனும் பைனரி எண்களில்தான் சேமித்து வைக்கும். வன்தட்டில் எந்த இடம் காலியாக இருக்கிறதோ அந்த இடத்தில் சேமித்து வைக்கும்.

எதை எப்போது வேண்டும் என்று கேட்கிறோமோ அதை அப்போதே அப்படியே கொண்டு வந்து கொடுத்துவிடும். எல்லாம் கண் இமைக்கும் நேரத்தில் நடக்கும் நாடகம். நம்ப முடியாத நாடகம். மனிதன் செய்த சாதனை நாடகம்!

இந்த வன்தட்டுகள் 20GB, 40GB, 80GB, 120GB, 160GB, 240GB எனும் கொள் அளவுகளில் விற்கப்படுகின்றன. GB என்றால் Giga Bytes. ஒரு சாதாரண வன்தட்டில், உலகத்தில் உள்ள அத்தனை பேருடைய பெயர், முகவரி, வயது எல்லாவற்றையும் எழுதி வைத்துவிடலாம் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். அந்த அளவுக்கு வன் தட்டின் கொள்ளளவு இருக்கிறது.

இவை எல்லாவற்றையும் கண்டுபிடித்தது மனிதன்தான். அவன் கண்டுபிடித்துக் கொண்டு  எங்கோ போய்க் கொண்டிருக்கிறான்.

கணினியைப் படித்துக் கொள்ளுங்கள், தெரிந்து கொள்ளுங்கள் என்று சொல்லிக் கொண்டு நாமும் எங்கோயோ போய்க் கொண்டிருக் கிறோம்.

இரும எண்கள் – Binary Nambers

எடுத்துக்காட்டாக, MALAYSIA என்று விசைப்பலகையில் தட்டுகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். விசைப்பலகை என்பது Key Board. ஆங்கில எழுத்துகளையும் மற்ற எண்களையும் கொண்ட ஓர் அச்சுப்பலகை.

கணினியின் முன் உட்கார்ந் திருக்கிறதே அதுதான் இந்த விசைப்பலகை. MALAYSIA என்று விசைப்பலகையில் தட்டியதும் உங்கள் திரையிலும் MALAYSIA என்று காண்பிக்கப்படும்.

இந்த 0,1 எண்களுக்கு Binary எண்கள் என்று பெயர். தமிழில் இரும எண்கள் என்று சொல் வார்கள். ஆனால், மையச் செயலகத்தின் உள்ளே வேறு மாதிரியான வேலை நடக்கிறது.

M என்று தட்டினால் 01001101 என்ற பைனரி எண்களை உருவாக்கும். A பொத் தானைத் தட்டினால் 01000001 என்ற பைனரி எண்களை உருவாக்கும். Lக்கு 01001100. Aக்கு 01000001. Yக்கு 01011001. Sக்கு 01010011. Iக்கு 01001001. Aக்கு 01000001. என்ற பைனரி எண்களை உருவாக்கும்.

ஆக, 01001101 – 01000001 – 01001100 – 01000001 – 01011001 – 01010011 -01001001 – 01000001 என்ற பைனரி எண்களுக்கு MALAYSIA எனும் எழுத்து வடிவம் என்று மையச் செயலகம் அர்த்தம் தெரிந்து கொள்ளும்.

மையச் செயலகத்தில்தான் இந்த வேலை நடக்கும். மற்றபடி திரையில் காட்டும் போது MALAYSIA என்று எழுத்துகள் மட்டும் தெரியும். அவ்வளவுதான். பைனரி எண்கள்    தெரியாது. இவை எல்லாம் ஒரு வினாடியின் பல இலட்சம்  பங்கு நேரத்தில் நடந்து முடிந்து விடுகிறது.

அவ்வளவு வேகத்தில் அது வேலை செய்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். உங்களால் நம்ப முடிகிறதா!

மையச் செயலகம் – Central Processasing Unit

Central Processasing Unit என்று சொல்லப்படும் மத்திய அல்லது  மையச் செயலகத்தைப் பற்றி ஒரு விஷயத்தைச் சொல்கிறேன். நீங்கள் நம்பவே மாட்டீர்கள். இதைப் பொது வாக Processor என்று சுருக்கமாக அழைப்பார்கள். இதற்கு 0 எனும் சுழியம் எண்ணும் 1 எனும் ஒன்று எண்ணும் மட்டுமே தெரியும்.

கணினி மொழியில் 0 என்றால் ‘இல்லை’, 1 என்றால் ‘உண்டு’ என்று அர்த்தம். ஆங்கிலத்தில் 0 என்றால் off. 1 என்றால் on. நம் வீட்டு அறையில் உள்ள சுவிட்ச்   பொத்தானைத் தட்டி on செய்கிறோம். வெளிச்சம் வருகிறது. Off செய்தால் வெளிச்சம் போய்விடுகிறது. அதைப் போல இந்த on – off முறையும் கணிணினிக்குள்ளும் வேலை செய்கிறது. 0 என்றால் off. 1 என்றால் on.

இந்த 0,1 எண்களைத் தவிர வேறு எந்த எண்ணுமே கணினிக்குத் தெரியாது. இந்த 0,1 எண்களை வைத்தே மற்ற மற்ற எண்களையும் எழுத்துகளையும் தெரிந்து கொள் கிறது. கணினி இயங்குவதற்கு அடிப்படையான எண்கள் இவை இரண்டும்தான்.

இந்த இரண்டு எண்களை வைத்துதான் கணினியின் எல்லா செயல் பாடுகளும் இயங்குகின்றன. தலையெழுத்து என்பார்களே… கணினியைப் பொருத்த வரையில் அந்த இரண்டு எண்கள்தான் அதனுடைய தலையெழுத்துகள்.

கணினி தன் தகவல்களை 0,1 எனும் பைனரி எண்களில் சேமித்து வைக்கிறது என்று  தெரிந்து கொண்டோம். சரி! இப்படி சேர்த்து வைக்கும் போது ஒரு வரிசையில் எட்டு பைனரி எண்கள் மட்டுமே இருக்கும்.

ஒரு வரிசை என்பது ஒரு கொத்து. 0 என்பது ஒரு Bit, 1 என்பது ஒரு Bit. இப்படி 0 என்பதும் 1 என்பதும், ஒவ்வொரு பிட்டாகச் சேரும் போது, எட்டு பிட்டுகள் சேர்ந்ததும் அவை ஒரு Byte ஆக மாறும்.

எட்டு இடங்களிலும் இந்த 0,1 பிட்டுகள் வரிசையாகஒரு கொத்தாக அமையும். எட்டு 0 அல்லது எட்டு 1 க்கள் சேர்ந்ததும், அந்த வரிசை ஓர் எழுத்தைக் குறிக்கும். அது எந்த எழுத்தாகவும் இருக்கலாம். அந்த ஒரு வரிசையை Byte என்று அழைக்கிறார்கள். மறுபடியும் சொல்கிறேன்.

நன்றாக ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். Bit என்பது வேறு. Byte என்பது வேறு. எட்டு பிட்டுகள் சேர்ந்தால்தான் ஒரு பைட் வரும்.

ஒரு Byte  என்பது ஓர் எழுத்து அல்லது ஓர் எண்ணைக் குறிக்கும். ஆங்கிலத்தில் Character என்று சொல்கிறார்கள். அந்த எழுத்து A ஆக இருக்கலாம். B ஆக இருக்கலாம். C ஆக இருக்கலாம். D ஆக இருக்கலாம். E ஆக இருக்கலாம்.

ஆக, A என்ற எழுத்திலிருந்து Z என்ற 26 எழுத்துகள் வரையில், எந்த எழுத்தாகவும் இருக்கலாம். அல்லது 0 லிருந்து 9 க்குள் எந்த எண்ணாகவும் இருக்கலாம். அல்லது @, #, %, &, *, !, ? போன்ற குறியீடுகளில் ஏதாவது ஒன்றாகவும் இருக்கலாம்.     பொதுவாக 256 குறியீடுகளை ஒவ்வொரு கணினியும் தன் நினைவகத்தில் பதிவு      செய்து வைத்திருக்கும்.

இந்த இரண்டே இரண்டு எண்களை வைத்துக் கொண்டுதான் கணினி இந்த உலகத்தையே பேரம் பேசிக் கொண்டிருக்கிறது. ஜெகதாலப் புரட்சியும் செய்கிறது. மற்ற எல்லா அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கும் அஸ்திவாரம் போடுகிறது.

மில்லியன் பங்குகள்

ஒரு வினாடி நேரத்தை ஒரு மில்லியன் பங்குகள் போடுங்கள். அந்த ஒரு பங்கு நேரத்திற்கும் குறைவான நேரத்தில் கணினி தன் வேலையைச் செய்கிறது. அந்தக் கால அளவை Nano Second என்று ஆங்கிலத்தில் சொல்கிறார்கள்.

பாருங்கள்! எத்தனைக் குறைவான வினாடி நேரம். அதனுடைய கணக்கு வழக்குகள் எல்லாமே 0 1 எனும் பைனரி எண்களிலேயே செய்து முடித்துவிடுகிறது.

மறுபடியும் சொல்கிறேன். கவனமாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். Processor எனும் மையச் செயலகத்தில் 0,1 எனும் எண்கள் எட்டு எட்டு இடங்களில் கொத்து  கொத்தாக உருவாக்கப் படும். இந்த எட்டு 0,1 எண்களைக் கொண்ட ஒரு வரிசைக்கு அல்லது கொத்திற்கு Byte என்று  பெயர். விசைப் பலகையில் நீங்கள் தட்டும் ஒவ்வோர் எழுத்துக்கும் ஒரு பைட் உருவாகிறது.

இந்தக் கணினி, பைனரி எண்களினால் மட்டுமே படிக்க முடியும். பைனரி எண்களினால் மட்டுமே எழுத முடியும். இந்த மாதிரி படிப்பதற்கும் எழுதுவதுவதற்கும் கணினிக்கு என்று ஒரு தனி மொழி இருக்கிறது.

நாம் தமிழர்களைக் கண்டால் தமிழ் மொழியில் பேசுகிறோம். வெள்ளைக்காரர்களைக் கண்டால் ஆங்கிலத்தில் பேசுகிறோம். நம் சகோதர žன, மலாய்க்காரர்களைக் கண்டால் மலாய் மொழியில் பேசுகிறோம்.

ஆனால், கணினியிடம் மனிதன் பேசுவது எப்படி. அதனுடன் தொடர்பு கொள்வதற்கு தனிப்பட்ட ஒரு மொழி வேண்டாமா. அதற்கு Machine Language என்று பெயர். இதை நம் வழக்கில் கணினி மொழி என்று சொல்லலாம்.

ஆக, உங்களுக்கு ஒன்று சொல்வேன். கொஞ்சம் மெனக்கெட்டு (மேனிக் கெட்டு) கணினியைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். கால வெள்ளத்தில் காணாமல் போய்விட வேண்டாம். இன்றைக்கே கணினிப் பாடங்களைத் தொடங்கி விடுங்கள். சரியா!

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: